இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சார்”.
இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது.. என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனா, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தம்பி போஸ் வெங்கட் அவர்களுக்கும், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொள்கிறேன் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் இனிய வாழ்த்துக்கள், நன்றி.