அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்த எதிரிகளின் எண்ணிக்கை 55 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆகவும் உயர்ந்துள்ளது. அதோடு 20 பீரங்கிகள், 4 ராணுவ புல்டோசர்களும் அழிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், லெபனானின் எல்லைகள் மற்றும் இஸ்ரேல் எல்லைக்குள் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்பான எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.