ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நமீதா பிரமோத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சீதா ராமம். நாட்டுப்பற்றை மையமாக கொண்ட ஒரு காதல் கதையை மிக அழகாக இப்படத்தின் மூலம் இயக்குநர் சொல்லி இருந்தார். சீதா ராமம் படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து, சீதாராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி பிரபாஸை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக அறிமுக நடிகை இமான்வி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்த நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இப்படத்தில் நடிகை நமீதா பிரமோத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நமீதா பிரமோத் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு உதயநிதி, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘நிமிர்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. நடிகர் பிரபாஸ் ‘தி ராஜ் சாப்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.