பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.