குடும்பங்கள் கொண்டாடும் படமாக வேட்டையன் மாறியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்தார். தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாகல வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறியதாவது: “ நடிகர் ரஜினிகாந்த் இல்லையென்றால், வேட்டையன் சாத்தியமில்லை. ஜெயிலர் படத்தின் பெரிய கமர்சியல் வெற்றிக்குப் பின்பும் கதையைச் சார்ந்த ஒரு திரைப்படத்தில் அவர் நடித்தார். படைப்பு சுதந்திரத்துடன் இப்படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது உருவாகியிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.