பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.