நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நாளாக இருந்தாலும் பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ம் தேதி (5.11.2024) அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபரும் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய முக்கிய மாநிலங்களில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பும் முன்கூட்டியே புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘வழக்கமாக தேர்தல் நாளில் வாக்களிக்கும் பழைய நடைமுறையை பின்பற்றுகிறேன். ஆனால், இந்த ஆண்டு குடியரசு கட்சி வாக்காளர்கள் மத்தியில் முன்கூட்டியே ஓட்டு போடும் நடைமுறை முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரபலமடைந்துள்ளது. இந்த முறை முன்கூட்டியே வாக்களிக்க உள்ளேன். குடியரசு கட்சியினர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முன்கூட்டியே வாக்களிப்பது நல்லது’ என்றார்.