ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் 27-ம் தேதி கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவரும், நஸ்ரல்லாவின் உறவினருமான ஹசீம் சபிதீன் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் கொண்ட, ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹசீம் சபிதீன் உயிரிழந்துவிட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.