தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, கடந்த அக். 4 ம் தேதி மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநாட்டு திடலில் சுமார் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதனுடன், மழை பெய்தாலும் பாதிக்காத வகையில், ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் போடப்படுவதாக சொல்லப்படுகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்கும் வண்ணம் 800 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதனுடன் அடிப்படையான பார்க்கிங், கழிவறை, குடிநீர், மருத்துவம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.