சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக, ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையானது 10 மாடிகளை கொண்டது. அங்கு, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் சத்தத்துடன் டைல்ஸ்களுக்கு மத்தியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். 10 தளங்களில் இருந்த ஊழியர்களும் வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் விரிசல் ஏற்பட்ட டைல்ஸ்கள் அகற்றப்படுவதால் ஊழியர்கள் அச்சப்பட வேண்டாம் என தீயணைப்புத் துறையினர் கூறினர். அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதிபடுத்த அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு விரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. புதிய டைல்ஸ்கள் உடனடியாக மாற்றப்படும்.” இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.