த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை. தமிழக அரசு மதுரை உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.