விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அணிந்த படி விஜய் நடந்து சென்றார். தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. வெற்றி வாகை என தொடங்கும் இப்பாடலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடலை விஜயுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். இப்பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின வேறுபாடற்ற மதசார்பற்ற சமத்துவ சமூகத்தை படைப்போம் என்று விஜய் பேசியுள்ளார்.