இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், காசா முனை பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் எல்லையருகே, வடபகுதியில் அமைந்த பெய்ட் லஹியா என்ற நகர் மீது இஸ்ரேல் இன்று கடுமையான தாக்குதலை தொடுத்தது. இதில், புலம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஒன்று சேதமடைந்தது. இதில் 20 பேர் காயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தாக்குதலில் 60 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.