தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.
28/10/2024 அன்று தென்மராட்சி-நாவற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அழிவுப்பாதைiய நோக்கி தமிழ் மக்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர். இதனை எம் மக்கள் உணர வேண்டும். எம் மக்களை இவ்வளவு காலமாக வழிநடத்திய தமிழ்த்தேசிய வாதிகள் சாதித்தது என்ன?. எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் அவர்கள் செய்த ஒரே சாதனை.
70வருடங்களாக போராடி உயிர்களை-உடைமைகளை -பல தலைமுறைகளின் எதிர்காலத்தை இழந்தது எமது சொந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதற்காகத் தானா?
தமிழர் இன்றி தமிழ்த் தேசியம் சாத்தியப்படாது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்
9ஆக இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது 6ஆக குறைவடைந்துள்ளது. இந்த ஆறு மூன்றாக குறைவடைய வெகு காலம் தேவைப்படாது. ஏன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்? தாமே ஏகப்பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இத்தனை காலமாக வென்ற தமிழ்த்தேசியவாதிகள் மக்களை வாழ வைப்பதற்காக எதையாவது செய்தார்களா? மக்களின் அடிப்படை தேவைகள், பொருளாதார விருத்திக்காக என்ன திட்டங்களை செய்தார்கள்?
எனவே மக்கள் இந்தத் தேர்தலில் தேடலுடனும் – தெளிவுடனும் வாக்களிக்காவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.