குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.
அடுத்து விருது விழா – 2024 மலரைத் தொகுப்பாசிரியர் திரு. குரு அரவிந்தன் வெளியிட்டுவைக்க, தலைவர் திரு. ரவீந்திரநாதன் கனகசபை பெற்றுக் கொண்டார். வெளியீட்டுரையில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வரலாறு இந்த மலரில் புகைப்படங்களுடன் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக் குரு அரவிந்தன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்காக பண்டிதர் திரு. ச.வே பஞ்சாட்சரம், கலாநிதி திருமதி கௌசல்யா சுப்பிரமணிய ஐயர், தேசபாரதி திரு. வே. இராசலிங்கம், எழுத்தாளர் திரு. முருகேசு பாக்கியநாதன், பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம், கலைஞர் திரு. வயிரமுத்து திவ்வியராஜன் ஆகியோரே செயற்குழுவினரால் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களைப் பற்றிய அறிமுக உரையை திருமதி ராஜினி சுபாகரன், திருமதி நாகேஸ்வரி ஸ்ரீ குமரகுரு, திரு. ஜெகதீஸ்வரன் ஐயாத்துரை, பாஸ்டர் திரு. சோதி செல்லா, திருமதி கமலவதனா சுந்தா, திருமதி ஜோதி ஜெயக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். விருதாளர்கள் சான்றிதழ், விருது மற்றும் மலர்க்கொத்துக் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து விருதாளர்களின் ஏற்புரை இடம் பெற்றிருந்தது.
சென்ற வருடம் – 2023, திரு. அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் விருதாளர்களாகப் பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம் இளையதம்பி, பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், முனைவர் பால சிவகடாட்சம், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், திரு. தங்கராசா சிவபாலு, திரு. சின்னையா சிவநேசன், திரு பாலா குமாரசாமி (தேவகாந்தன்), சிந்தனைப்பூக்கள் திரு. பத்மநாதன், திரு. தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்) திரு. தெய்வேந்திரன் சண்முகராஜா (வீணைமைந்தன்) ஆகியோருக்கு விருது வழங்கிக் கௌரவித்திருந்தோம்.
இணைத்தின் ஆரம்பகாலங்களில் தலைவராகவும், காப்பாளராகவும் இருந்த அமரர் கவிஞர் திரு. வி. கந்தவனம், காப்பாளராக இருந்த மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி, காப்பாளர்களாக இருந்த அமரர் எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், அமரர் க.தா. செல்வராசகோபால், அமரர் க.செ.நடராசா, மற்றும் அமரர் வித்துவான் க. செபரத்தினம், அமரர் பண்டிதர் மா.சே. அலெக்ஸாந்தர், அமரர் மொகமட் ஹன்ஸீர் ஆகியோருக்கும் எழுத்தாளர் இணையம் ஏற்கனவே 10 வது அ+ண்டு நிறைவின் போதும், அதன் பின் வெள்ளிவிழாவின் போதும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு மலரை வெளியிட்டு வைத்த எழுத்தாளர் குரு அரவிந்தன் மெய்நிகர் மூலம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் எழுத்தாளர் அரங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘இதுவரை 26 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து தங்களைப் பற்றியும், தங்கள் ஆக்கங்கள் பற்றியும் உரையாற்றி இருக்கின்றார்கள். இந்த நிகழ்வில் இதுவரை பங்கு பற்றியவர்களின் பெயர்களை இங்கே தருகின்றேன். எழுத்தாளர் குரு அரவிந்தன், சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், சின்னையை சிவநேசன், பேராசிரியர் இ.பாலசுந்தரம், பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன், பண்டிதர் சா.வே. பஞ்சாச்சரம், எழுத்தாளர் கனி விமலநாதன், எழுத்தாளர் ஆர்.என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் இராசலிங்கம் வேலாயுதர், எழுத்தாளர் பால சிவகடாட்சம், எழுத்தாளர் த. சிவபாலு, கலைஞர் சோக்கெல்லோ சண்முகம், எழுத்தாளர் வீணைமைந்தன் கே. ரி. சண்முகராசா, எழுத்தாளர் முருகேசு பாக்கியநாதன், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், கலைஞர் வைரமுத்து திவ்வியராஜா, கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம், எழுத்தாளர் ரவீந்திரன் கனகசபை, எழுத்தாளர் சாம் தில்லையா, கவிஞர் புகாரி, நாடகக் கலைஞர் கணபதி ரவீந்திரன், எழுத்தாளர் அகில் சாம்பசிவம், எழுத்தாளர் செல்வம் அருளானந்தம், எழுத்தாளர் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராசா, எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் வ.ந. கிரிதரன், எழுத்தாளர் குரும்பசிட்டி ஐ. ஜெகதீசன் ஆகியோர் இதுவரை கலந்து கொண்டனர் என்று குறிப்பிட்டார்.
விருதாளர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து, விளம்பரதாரர்களும், தன்னார்வத் தொண்டர்களும், நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களும் கௌரவிக்கப்பட்ட பின், செயலாளர் முனைவர் திருமதி வாசுகி நகுலராஜா அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சித் தொகுபாளர்களாக திருமதி ஜோதி ஜெயக்குமார், திரு அகணி சுரேஸ் ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றியிருந்தனர்.