ந.லோகதயாளன்.
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் கடற் படுக்கையை அண்டி வாழும் கிளத்தி் மீன்கள் பெருமளவில் இறப்பதற்கு பருவகால கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தால் கடல் நீரின் உப்புத்தன்மை குறைவடைந்ததே காரணம் என நாரா நிறுவனப் பணிப்பாளர்
க.அருளானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
தென்மேற் பருவ பெயற்சி காலத்திலிருந்து வடகீழ் பருவ பெயற்சி கால மாற்றத்தின் போது காற்று திசை மாற்றதினால், அதுவரை இலங்கை இந்திய கிழக்கு கரையோரமாக வடக்கு நோக்கிப் பாயும் கிழக்கு இந்திய கரையோர கடல் நீரோட்டம் திசை மாற்றமடைந்து வட வங்காள விரிகுடாவிலிருந்தது தெற்கு நோக்கி இந்திய கிழக்கு கரையோரமாக பாய்ந்து இலங்கையின் கிழக்கு கரையை வந்தடைகிறது, இன் நீரோட்டம் தொடந்து இலங்கையின் தெற்கு முனையில் மேற்கு நோக்கி திரும்பி அரபிக் கடலை சென்றடைகிறது.
இந்த இந்திய கரையோர கடல் நீரோட்டம் பிரமபுத்திரா, கங்கை போன்ற நதிகளின் நன் நீரை கிழக்கு கடற்கரைக்கு கொண்டு வருவதால் கடல் நீரின் உப்புத்தனமை குறைவடைகிறது, உப்புத்தன்மை குறைபாடு கடற்படுக்கையை அண்டி வாழும் கிளத்தி போன்ற மீன்களின் உடற் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நலிவடைந்த மீன்கள் கடல் நீர் மேற்பரப்பிற்கு வருகின்றன. அலையை எதிர்த்து நீந்த திராணியற்ற இம் மீன்கள் அலையில் சிக்கி கரையில் ஒதுக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஜப்பசி மாத காலத்தில் நிகழும் போதும், உப்புத்தனமை குறைபாட்டிற்கான காரணமான நன் நீரின் அளவு பெரு ஆறுகளின் நீரேந்து பகுதியின் மழை வீழ்ச்சியில் தங்கி இருக்கிறது.
இந்த மழை வீழ்ச்சியின் அளவை இந்து சமுத்திரத்தின் கிழக்கு (கிழக்கு ஆபிரிக்க கடல்) மேற்கு (சுமத்திரா) கடல் நீர் வெப்ப வேறுபாடு தீர்மானிக்கிறது, இது இந்திய கடல் இருமுனை என்றழைக்கப்படுகின்றது. 2023 இலிருந்து இந்திய மேற்கு கடல் நீரின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால், தற்காலப்பகுதியில் இந்திய கடல் இருமுனை நேர் பெறுமானத்தை அடைந்திருக்கிறது. நேர் பெறுமான காலப்பகுதியில் வங்காள விரிகுடாவினுள் நீரகற்றும் பெரு ஆறுகளின் (இராவட்டி, பிரமபுத்திரா, கங்கா, கிருஷ்ணா, கோதாவரி, மகாவலி) நீரேந்து பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பெறப்படுகிறது. இதனால் அதிகளவு நன் நீர் இந்திய கரையோர கடல் நீரோட்டம் மூலம் கிழக்கு கரையை வந்தடைந்து கடல் நீரின் உப்புத்தன்மையை அதிகளவு குறைவடய செய்து மீன் இறப்பிற்கு காரணமாக அமைகிறது. கடந்த தாசப்பத்தில் இந்திய கடல் இருமுனை நேர் பெறுமானத்தை 2016 மற்றும் 2019 ஆண்டு காலப்பகுதியில் அடைந்திருந்தது என்றார்