நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் 1979-ல் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஹரா’ படம் வெளியானது. இந்த நிலையில் 93 வயதாகும் சாருஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சாருஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சாருஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை அவரது மகளும் நடிகையுமான சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தீபாவளிக்கு முந்தைய இரவு அப்பா சாருஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது நலமுடன் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.