சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சுப.தமிழ்ச்செல்வன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம், ‘விஜய்யின் அரசியல் நிலைப்பாடு பற்றி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளீர்களே என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது: விஜய் கட்சியின் கொள்கை முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியமும், திராவிடமும் எப்போதும் ஒன்றாக முடியாது.
விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும். திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வதாகும். தமிழினம் எங்கேயாவது பாதிக்கப்பட்டால் அதற்காக கண்ணீர் வடிப்பது தமிழ் தேசியமாகும். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே திராவிடமாகும். 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட அரசியலால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது. அவர்கள் வாரிசுகளோடு வரிசை கட்டி நிற்கிறார்கள். அடுத்த வாரிசும் தயாராக இருக்கிறது. இப்படி இருக்கும்போது திராவிடத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் தேசியம். ஆனால் அதனை பேசி அரசியல் செய்து ஏமாற்றுவது திராவிடம். எனவே திராவிட கொள்கைகளை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். அது தம்பியாக இருந்தாலும் சரி, என்னை பெற்றெடுத்த தாய்-தந்தையாக இருந்தாலும் சரி. அவர்களும் எங்களுக்கு எதிரிதான். சினிமாவில் வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியாதோ, அதே போன்று தான் தமிழ் தேசிய மும், திராவிடமும் எப்போதுமே ஒன்றாக முடியாது. அ.தி.மு.க. பற்றியும் விஜய் விமர்சித்து எதிர்ப்பு தெரிவிக்காததது ஏன்? இந்தியா ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். காங்கிரஸ் தமிழகத்தின் வரலாற்று பகைவன். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை முதலில் கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான். விஜய் அதுபற்றி பேசாதது ஏன்? அ.தி.மு.க. என்ன புனிதமான கட்சியா? அக்கட்சி தலைவர் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே. அந்த கட்சியை பற்றியும் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை. எனவே நாங்களும் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.