அவசர ஊர்தி வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது திருச்சூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) திருச்சூர் பூரம் நிகழ்வின் போது மத்திய அமைச்ச்ர சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக மத்திய இணையமைச்சர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.