தவெக அரசியல் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சாரம், பால் கட்டண உயர்வுக்கு தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை; நீட் தேர்வு ரத்து, இஸ்லாமியர் உரிமை உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து வருகின்ற சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளோடு கூட்டணியே வேண்டாம், தனித்துப் போட்டியிடலாம் என விஜய்யிடம் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி, விசிக கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் கட்சிப்பணியை மட்டும் பாருங்கள் என நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தலில் தவெக நிலைப்பாடு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகளை விஜய் கேட்டறிந்தார். மேலும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளை எழுத்துபூர்வமாக விஜய் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.