எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார்.
அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது. தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க. குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.