திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத் தில் ஆய்வுக்கூடமும் உள்ளது. கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து காலை பள்ளி திறக்கப்பட்டது. காலை முதல் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர். அப்போது பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கினர். மேலும் பலருக்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டது. வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.