சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த பதிவேற்றம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் ‘கைதி 2’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.