மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, 802,401.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில நாட்களாக 200,000 ரூபாயை தாண்டியுள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி வரை செட்டித்தெரு தங்க விலை நிலவரப்படி 24 கரட்டின் விலை 220,000 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கத்தின் விலையும் 200,000 ரூபாய்க்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது, 226,900 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 208,050 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 198,600 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதுடன், ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.