தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது, ‘டிராகன்’ படத்தின் கதாபாத்திர அறிமுக பதாகையை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
