காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருவது உலகை அச்சுறுத்தும் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஐக்கியநாடுகள்சபையும் நாடுகளின் அரசாங்கங்களும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்நாடுகள் பலவற்றில் பசுமைக் கட்சிகள் உருவாகி சூழல் அரசியலில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால் பேரினவாதம் கோலோச்சும் இலங்கையில் மட்டும் சூழலியல்வாதம் இன்னமும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.
இதனை மாற்றியமைக்க இலங்கைப் பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சனநாயகத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதன் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை (07.11.2024) மல்லாகத்தில் நடைபெற்றபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாகத் தனது ஆலோசகராக விடுதலைப் புலிகளினுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய எரிக்சொல்ஹெய்மை நியமித்திருந்தார். ஆனால் எவ்விதமான பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் ஜனாதிபதியானதும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்குச் சர்வதேசத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்தார்.
ஆனால் செயல் வடிவம் பெறவில்லை. இந்த அறிவிப்பை உலகநாடுகளிடமிருந்து கடன் வாக்குவதற்கான ஒரு உத்தியாக மாத்திரமே அவர் பயன்படுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் பெரும்பாலானவை வளங்களைக் கண்மூடித்தனமாக அழித்துச் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றனவாகவே உள்ளன.
சுற்றுச்சூழலைப் பலிகொடுத்து நிலையான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது. சூழலை அழித்து ஒருபோதும் பொருளாதாரச் சுமையில் இருந்தும் கடன் சுமையில் இருந்தும் விடுபடமுடியாது. சூழல் அழிவும் வளங்களின் சூறையாடலும் அரசியல் நிலையின்மையையும் பொருளாதார நிலையின்மையையும் ஏற்படுத்தும். இறுதியில் நாட்டில் அமைதியின்மையையும் அரசுக்கெதிரான குழப்பங்களையுமே ஏற்படுத்தும். உலகநாடுகள் பலவற்றின் வரலாறு இதுவாகவே உள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும் சூழலியத்தையும் இரண்டு கண்களாகக் கருதுகின்றது. கம்யூனிசம், சோசலிசம் போன்றே தேசியமும் சூழலியமும் மானுடத்தை வழிநடத்துவதற்கான கோட்பாடுகள்தாம். இலங்கை அரசியலிலேயே தேசியத்தையும் சூழலியத்தையும் வலியுறுத்துகின்ற ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மட்டுமே.
அந்த வகையில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அதன் வேட்பாளர்களை மக்கள் வெல்லவைத்து முடிவெடுக்கும் அதிகார பீடமான பாராளுமன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவங்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.