ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் மற்றும் முடிசூடிய நாள் சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா காலை 8.30 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கஞ்சேரிகள் நடைபெறுகிறது. மாலை பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாமும் கடுமையாக உழைப்போம் நமது ஆட்சியை நிறுவுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, “ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம். தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய ராஜராஜ சோழனின் 1039-ம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் அவர். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். நாமும் கடுமையாக உழைப்போம்… நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்.” இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.