சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள புறநானூறு படத்தில் மலையான நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்.31-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். இப்படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அதே சமயம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பேசப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
