காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக லெபனானிலும் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. முன்னதாக ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக புதுவிதமான தாக்குதல் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைத்து பெரும் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17-ந்தேதிகளில் லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறின.
சிரியாவின் சில பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் அந்த நாடு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதலை நிகழ்த்தியது தாங்கள்தான் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு வெளிப்படையாக தெரிவித்தார். இதுதொடர்பாக வாராந்திர மந்திரிசபை கூட்டத்தில் பேசிய அவர், “பாதுகாப்புத்துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் மீறி பேஜர் தாக்குதல் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கொலை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்று அவர் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 165 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த ஏவுகணைகள் வடக்கு இஸ்ரேலின் ஹைபாவைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலைத் தாக்கிய மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.