நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் சிறந்த வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆண்மையில், அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து ‘மிஸ் யூ’ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தை இயக்கியவர். இந்த திரைப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.