பேராசிரியர் சி. மௌனகுரு
அறிமுகம்
விபுலம் என்றால் அறிவு அல்லது புலமை என்று ஒரு அர்த்தம் உண்டு. அறிவின் ஆனந்தம் என்ற பொருளில் விபுலானந்தர் என்ற பெயர் அமைந்திருக்கிறது
வித்தி என்பதிலேயே வித்தை என்று சொல் அமைந்திருக்கின்றது. வித்தை என்பதும் அறிவின் இன்னொரு பகுதி தான். அதற்கு புலமை என்று ஒரு அர்த்தம் உண்டு. எனவே புலமையின் ஆனந்தம் என்ற பொருளில் வித்தியானந்தர் என்ற பெயர் அமைந்துள்ளது. ஆனால் ஒருவர் பெயரை நாம் விபுலானந்தர் என அர்விகுதி கொடுத்து அழைக்கிறோம் இன்னொருவர் பெயரை அன் விகுதி கொடுத்து அழைக்கிறோம்.சிவனையும் முருகனையும் கூடச் சைவப் பெருமக்கள் அன் விகுதி கொடுப்பதை இவ்விடம் நினைவு கூர்வோமாக
பெயரின் இறுதியிலே ஆனந்தம் என்ற பெயரை இருவரும் கொண்டு ள்ளார்கள் புலமையிலே அறிவிலே ஆராய்ச்சியிலேயே ஆனந்தம் கண்ட இந்த இரு பெரியார்களையும் செயற்பாடுகளையும் எழுத்துக்களையும் ஒப்பிட்டுச் செய்யப்படும் ஆய்வு அவர்களைப் பற்றி மாத்திரம் அல்ல அவர்களின் காலப் பின்னணியையும் அக்கால சமூக உளவியலையும் கூட அறிந்து கொள்ள உதவும் இந்த ஆய்வு விரிவாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று.
அதற்கான முன்னுதாரணமாகவே இந்த சிறிய கட்டுரை அமைகிறது
நாம் இக்கட்டுரையில் வித்தியானந்தனை வித்தியானந்தர் என விளித்தே எழுதுகிறோம்
காலப் பின்னணி
விபுலானந்தரும் வித்தியானந்தரும் இரண்டு வேறு காலகட்டத்திலே வாழ்ந்த இரு பெரும் ஆளுமைகள். இந்த இரு பெரும் ஆளுமைகளையும் உருவாக்கிய காலச் சூழல் வெவ்வேறானவை . விபுலானந்தர் 1892 ஆம் ஆண்டு பிறந்தார் 1947 ஆ ம் ஆண்டு காலமானார் 55 வருடங்கள் உலகில் வாழ்ந்தார்
வித்தியானந்தரை உருவாக்கிய காலச் சூழல் வேறு அவர் 1924 ஆம் ஆண்டு பிறந்தார் 1989 ஆம் ஆண்டு காலமானார் 65 வருடங்கள் உலகில் வாழ்ந்தார்
விபுலானந்தரின் மாணவர் வித்தியானந்தர், இளைஞரான வித்தியானந்தன் விபுலாந்தரைச் சந்தித்தகாட்சிகள் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன் விபுலானந்தரும் வித்தியானந்தரும் சந்தித்தபோது விபுலானந்தருக்கு வயது 51 வித்தியானந்தருக்கு வயது 20
விபுலானந்தர் காலம் தமிழ் நாட்டில் தமிழ் மொழி உணர்வு தோன்றிய காலம், தமிழ் ஆராய்ச்சியின் ஆரம்பகாலம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அச்சுவாகனம் ஏறிவிட்ட காலம் அது எழுத்து வடிவில் பரவலான காலம் அதையொட்டி ஆராய்வுகளும் எழத் தொடங்கிய காலம் வடமொழியும் தமிழ்மொழியும் சமமாக தமிழர் பலரால் ஏற்கப்பட்ட போதும் தமிழின் மேன்மைகளும் தொன்மை களும் அழுத்திப் பேசப்படத் தொடங்கிய காலம் அது. அன்னியர் ஆட் சியான ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்க் குறிப்பாக இந்தியாவும் சிறப்பாக தமிழகமும் இருந்த காலம் அக்காலம்
வித்தியானந்தர் வாழ்ந்த காலம் தமிழ்மொழி இன்னும் வளர்ந்திருந்த காலம் தமிழ் ஆராய்ச்சி பல வகைகளில் வளர்ந்து வந்த காலம் .ஒரு அரசியல் இயக்கமாக தமிழ்மொழி உணர்வு வடிவம் பெற்ற காலம்,தமிழகத்தில் திராவிடக் கழகம் ஆரம்பமாகி வளர்ந்த காலம். அந்நிய ஆட்சி அகன்று சுதந்திர இலங்கை உருவாகி இருந்த காலம் .சிங்கள மொழி அரசகரும மொழி ஆக்கப்பட்டுத் தமிழர்கள் தமது மொழி உரிமைச் சமத்துவம் வேண்டிக் குரல் கொடுத்த மொழி உரிமைப்போர் நடந்த முக்கியமான காலம் வித்தியானந்தர் வாழ்ந்த காலம்
இந்த இரண்டு காலச் சூழலையும் இந்த இரண்டு பெரியார்களும் எதிர்கொண்ட விதம் சுவராசியமானது
பல்கலைக்கழகத்தில்
இரண்டு பேருமே தமிழ்ப் பேராசிரியர்கள். தமிழையும் சங்க இலக்கியங்களையும் குறிப்பாக ஏனைய பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் துறை போகக் கற்றவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக ஆரம்பத்தில் விபுலானந்தர் இருந்தார் பின்னாளிலே பேராசிரியர் வித்தியானந்தன் அந்த நாற்காலியை அலங்கரித்தார்
பல்கலைக்கழகத்திற்கான தமிழ்ப் பாட திட்டங்களை விபுலானந்தர் அமைத்துக் கொடுத்தார் ஆயினும் அதை வளர்த்தெடுக்கின்ற பணியிலே தனது ஆசிரியரான பேராசிரியர் கணபதிப்பிள்ளையுடனும் செல்வநாயத்துடனும் சேர்ந்து உழைத்ததுடன் தன் காலத்தில் அத்திட்டத்தை மேலும் விரிவு படுத்தி எடுத்தவர் வித்தியானந்தன் ஆவார்
விபுலானந்தர் பழம் தமிழ் இலக்கித்துடன் மட்டும் நின்றாரில்லை நவீன இலக்கிய காரனாக பாரதியாரைக்காட்டி அக்கருத்தை மக்கள் முன் கொண்டு சென்றவர் விபுலானந்தர்
வித்தியானந்தரும் பழம் தமிழ் இலக்க்கியத்துடன் நின்றாரில்லை நவீன இலக்கிய காரனாக பாரதியாரின் சீடர் பாரதி தாசனின் பாடல்களில் ஈடுபாடுடையவர், பாரதி தாசனின் பாடல்களும் அவரது புரட்சிக் கவி பா நாடகமும் தமிழ் சிறப்புப் பயின்றோர்க்கு பாட நூலாக அறிமுகம் செய்ததில் வித்தியானந்தருக்கு அதிக பங்கு உண்டு என்பர்
விபுலானந்தரின் ஆய்வுத்துறை தமிழ்க் கலைகளாக இருந்தாலும் அது மையம் கொண்டிருந்தது இசைத்துறை ஆகும் அதிலும் தமிழருக்கான இசையை அவர் தேடினர். தமிழ் இசை வரலாற்றை பண்டைய இலக்கியங்களிலிருந்து முக்கியமாக நிலம் சார்ந்த பண்ணிலிருந்து ஆரம்பித்தார். அவர் அதன் வளர்ச்சியாகவே அவர் சிலப்பதிகார இசைக்குள் வந்தார் பின் தேவார இசைகளுக்குள் சென்றார், தமிழருக்கான இசையின் மூல வேர்களைத் தொட்டுக்காட்டினார், பண்ணிசையே தமிழிசை என்றார் அதன் வெளிப்பாடு யாழ் நூலாகும்
வித்தியானந்தரு டைய ஆய்வுத்துறை தமிழ் இலக்கியமாக இருந்தாலும் அந்த ஆய்வோடு தமிழ்க் கலைகளையும் சேர்த்துக் கொண்டார். சிறப்பாக அவர் ஈழத் தமிழருக்கான நாடகத்தைத தேடினார். சங்க இலக்கியங்களிலே அதன் மூல ஊற்றுக்களைக் கண்ட அவர் அதன் தொடர்ச்சியாக்வும் வளர்ச்சியாகவும் தமிழ்க் கூத்துகளைக்கண்டார், அவருடை கூத்தாய்வுகள் ஈழத்தை மையம் கொண்டிருந்தன அதனுடைய வெளிப்பாடுகள் அவருடைய கட்டுரைகளும் அவர் தயாரித்த கூத்துகளும் அவர் உருவாக்கி விட்ட மாணவர்களும் ஆகும்
இசைத் தமிழும் நாடகத் தமிழும் யாழும் கூத்தும் மீளுருவாக்கம்
பண்டைய தமிழரின் யாழ்களைத் தேடிச் சென்ற விபுலானந்தர் அவற்றை தனது நூலிலே வரைந்தும் வைத்திருக்கிறார். ஒரு வகையில் அது ஒர் யாழ் மீளுருவாக்கமாகும்வில்யாழ், சகோட யாழ், பேரியாழ், மகரயாழ் என அவர் பல யாழ்களை தமிழருக்கு உரியதாக வடிவமைத்தார் அதே போலப் பண்டைய தமிழரின நாடகங்களைத் தேடிச் சென்ற வித்தியானந்தர் அந்த நாடகங்களின் மூல ஊற்றுக்களாகக் கூத்துக்களைக் கண்டறிந்தார்யாழ் வகைகளை விபுலானந்ததர் உருவாக்கியது போல வித்தியானந்தரும் கூத்து வடிவங்களை உருவாக்கிக் காட்டினார், ஒரு வகையில் தமிழ் கூத்துகளை மீளுருவாக்கினார் அதற்கு உதாரணமாகத் திகழ்பவை அவரால் தயாரிக்கப்பட்ட வடமோடிக் கூத்துக்களான கர்ணன் போர் இராவணேசன் வாலி வதை ஆகியனவும் தென்மோடிக் கூத்தான நொண்டி நாடகமும் ஆகும்.
தமிழ் எழுத்தாளர்களுடன்
ஈழத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்று ஆரம்பித்தார் பேராசிரியர் விபுலானந்த அடிகளார். அதேபோல ஈழத்து தமிழ் இலக்கியம் நாடகம் கலை என்று பேசியதோடு ஈழத்து எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து எழுத்தாளர்களோடு 1940 களிலே நெருங்கிய உறவை வைத்துக்கொண்டார்
பல்கலைக்கழக பேராசிரியரான வித்தியானந்தனும் அன்றைய எழுத்தாளர்களோடு நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார் விசேடமாக 1963 ஆண்டிலே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சஙக்த்தில் உரையாற்றியதுடன் இளங்கீரன் நடத்திய மரகதம் வெளிவர மிகவும் உதவியாக இருந்தார்
கண்ணகி வழக்குரையும் கூத்தும்
விபுலானந்தர் பிறந்த இடம் மட்டக்களப்பு காரைதீவு. அங்கு ஒரு பழம் பெரும் கண்ணகி அம்மன் கோவில் உண்டு. கண்ணகி அம்மன் வழிபாடு அவரை மிகவும் கவர்ந்தது.அங்கு பாடப்படும் கண்ணகி வழக்குரைகாவியம் மீது அவர் கொண்ட காதல் தான் அவரைச் சிலப்பதிகாரத்தின் மீது கவனம் செலுத்த வைத்தது அதன் விளைவு யாழ் நூல்
வித்தியானந்தர் பிறந்த இடம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆகும் அவருக்கு அயல் கிராமமான காங்கேசன் துறையில் ஆடுகின்ற கூத்துக்களையும் முக்கியமாக இசை நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு அவருக்குச் சிறு வயதிலேயே வாய்த்திருக்கிறது. தனது சிறுவயதில் அந்த கூத்துக்கள் மீது அவர் கொண்ட காதலின் விளைவே அவரது கூத்துப் பணிகளாகும்
மட்டக்களப்பில் பிறந்த விபுலானந்தர் யாழ்ப்பாணம் சென்று பணி செய்தது போல யாழ்ப்பாணத்தில் பிறந்த வித்தியானந்தர் மட்டக்களப்பு வந்து கூத்து கலைஞர்களையும் அண்ணாவிமார்களையும் தேடிச் சென்று கூத்தை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து பணியாற்றி இருக்கின்றார்
அரசியல் ஈடுபாடுகள்
இருவருமே அரசியல் ஈடுபாடு மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் விபுலானந்த அடிகளார் அந்நிய ஆட்சிக்கு எதிராக தேசிய இயக்கங்களோடு தொடர்கொண்டிருந்திருக்கிறார் காங்கிரஸின் அந்நிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார் காங்கிரஸ் கொடியைத்தன் வீட்டு முன்னால் பறக்க விட்டு அந்நிய எதிர்ப்பை ஆங்கிலேய அடக்குமுறை எதிர்ப்பை அந்த நாளிலேயே காட்டியிருக்கிறார்
வித்தியானந்தர் தமிழரசுக் கட்சியின் மீது ஈடுபாடு மிக்கவராக இருந்திருக்கின்றார். அந்த கட்சி தலைவர்கள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாரக்ள் 1956 இலே காலிமுகத் திடலில் சத்தியாக் கிரகப் நடந்த போராட்டத்தில் தொடர்புற்றிருக்கிறார் , யாழ்ப்பாணத்தில் ஆண்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை அன்றைய அரசுக்கு எதிராக அவர் நடத்தியும் இருக்கிறார்
புறநிலை நின்று தமிழ் ஆய்ந்தமை
விபு லானந்தர் வாழ்ந்த காலத்திலேயே அவர் தமிழ் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏனைய தமிழ் பண்டிதர்களின் கட்டுரைகளை அவர்களது தமிழ் ஆய்வை விட மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஆங்கிலத்தில் புலமைமிக்க அவர் மேற்கு நாட்டு ஆய்வு முறைகளை ஓரளவு கையாண்டு தன்னுடைய ஆராய்வுகளை புறநிலை ஆய்வுகளாகச் செய்தி ருக்கின் றார்..ஆங்கில இலக்கியங்களோடும் வடமொழி இலக்கியங்களோடும் தமிழை ஒப்பிட்டு ஒர் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வாளராகவும் திகழ்ந்திருக்கிறார்
வித்தியானந்தருடைய கலாநிதிப்பட்ட ஆய்வு இங்கிலாந்துப் பல்கலைக் கழகமொன்றில் செய்யப்பட்டது முனைவர் பட்டப் பேற்றுக்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்த அவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் , “தமிழர் சால்பு’ எனும் தலை சிறந்த தமிழ் நூலாக மறுவரைவு செய்து தந்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.
தமிழர் சால்பு சங்க காலத் தமிழர்கள் பற்றியதாக அவர்கள் வாழ்வியல் பற்றியதாக அது அமைந்துள்ளது அக்காலத்திலே சங்ககாலம் பற்றி வந்த எழுத்துக்களில் இருந்து வித்தியானந்தனுடைய தமிழர் சார்பு மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது அது ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வாகவும் சங்க இலக்கியங்களை அடிப்படையாக வைத்து ஒரு வாழ்க்கை முறையை கூறுவதாகவும் புராதான தமிழரின் சமயம் பண்பாடு பழக்கவழக்கம் விளையாட்டு தொழில் என்ற பலதரப்பட்ட விடயங்களையும் தருவதாகவும் அந்த நூல் அமைந்திருக்கின்றது.தன் எழுத்துகள் மூலம் அவர் யாழ்நூலில் காட்டும் முல்லை நிலத்தில் இசை தோன்றிய விதம் பற்றிய செய்திகள் படிதின்புறத் தக்கன யாழ் நூலும் அவ்வாறே பண்டைய தமிழரின் கலை வாழ்வின் ஒரு பக்கத்தை அவரகள் கையாண்ட இசையின் ஆழ அகலங்களைத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்துள்ளதுயாழ் நூல் ஒரு முகம் காட்டினால் தமிழர் சார்பு இன்னொரு முகம் காட்டும். ஒன்றினது தொடர்ச்சியாகவும் ஒன்றினது வளர்ச்சியாகவும் இவை இரண்டும் அமைந்திருப்பதனை இவ்விரு நூல்களையும் அருகில் வைத்து பார்ப்போருக்குச் சுலபமாக விளங்கும்
உடை அடையாளம்
விபு லானந்தரின் தோற்றத்தை ஒரு தடவை கற்பனை பண்ணிப் பாருங்கள் காவி உடை அவரது அடையாளம். வித்தியானந்தரின் தோற்றத்தையும் ஒரு தரம் கற்பனை செய்து பாருங்கள். தமிழ் தேசிய உடையும் கழுத்தைச் சுற்றி போட்ட சால்வையும் அவரது அடையாளம்
இவ்விரண்டும் வேறு வேறாகக் காண்ப்பட்ட போதும் இவை அவர்களது அடியாளங்கள் எனலாம்
விழிம்பு நிலை மக்கள் உறவு
விபுலானந்தர் தமிழ் நாட்டிலே வாழ்ந்த போது திருவேட்களம் என்னும் ஊரிலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே சென்று வேலை செய்து இருக்கிறார், அவர்களை மேலே கொண்டு வருவதில் அரும் பாடு பட்டிருக்கிறார். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் சிற்ப்பாக இந்தியப் பண்பாட்டிலும் குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டிலும் இல்லையென்ற மானுட சமரச எண்ணம் அவர் எழுத்துக்களில் மாத்திரமன்றிச் செயல் களிலும் காணப்படுகின்றன..
மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலின் மணியகர்த்தாக்களுள் ஒருவர் போல விளங்கிய அப்புக்காத்துச் சுப்பிரமணியம் அவர்களின் மைந்தன் தான் வித்தியானந்தன் விபு லானந்தர் போல வித்தியானந்தரும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே தோன்றிய நாடகக் காரர்களிடம் அன்று பெரும் செல்வாக்குடன் விளங்கிய இசை நாடகத்தை மேற்கொண்டு வருவதில் மிக முக்கியமாக பங்காற்றி இருக்கிறார். இசை நாடக மேதையான பி. வி வைரமுத்து அவர்கள் வித்தியானந்தனுக்கு மிக நெருக்கமான நண்பர் என்பதையும் அவருக்கும் இவருக்குமான உறவு ஒரு அற்புதமான உறவு என்பதையும் அவர்கள் இருவரையும் அறிந்தோர் அறிவார்கள்
தமிழ் மொழியின் எல்லைகளை அகட்டியமை
விபுலானந்தரும் வித்தியானந்தரும் தமிழை ஒரு குறிப்பிட்ட சமயத்துக்குள் அடக்கம் முயன்றார்கள் இல்லை அந்தத் தமிழ் பௌத்தர் சமணர் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உரியது என்ற பரந்த எண்ணத்தை இருவருமே கொண்டிருந்தார்கள்
விபுலானந்தர் கட்டுரைகள் சிலவற்றிலே சைவத்துக்கு அப்பாலும் தமிழ் வளர்ந்த கதை இருக்கின்றது. தென்னாட்டில் ஊற்றெடுத்த பக்தி இயக்கம் வடநாட்டில் பரவியமை பற்றிய விபுலான்ந்தர் கட்டுரையில் இக்கருத்துக்களைக் காண்லாம்.அதேபோல வித்தியானந்தருடைய கட்டுரைகளில் இஸ்லாமிய கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழை வளர்த்த கதை இருக்கிறது அவரது தமிழ் இலக்கியத் தென்றல் எனும் நூலில் உள்ள சில கட்டுரைகள் இதற்குச் சான்று
விபுலான்ந்தர் இஸ்லாமிய சூபி ஞானியான குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடிய ஞானப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடுடைவர் வித்தியானந்தர் பிறை அன்பன் என்ற பெயரில் இஸ்லாமிய கலை இலக்கியம் பற்றிநூல் எழுதியிருக்கிறார்
சின்னஞ்சிறிய வட்டத்துக்குள் தமிழை வைத்துக் கொள்ளாது அதை பேசுகின்ற மனிதர்கள் அத்தனை பேரையும் உள்ளடக்கி தமிழை தமிழ் மொழியை பார்த்தவர்கள் இவர்கள் இருவரும்
இருவரும் நிறுவனங்களுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார்கள் கிழக்கு மாகாணத்திலேயே ராமகிருஷ்ணன் மிஷன் நிறுவனங்களுக்கு பொறுப்பாளராக இருந்து அதைத் திறம்பட நிர்வாகித்து அதனூடாக பல்வேறு கல்வியலாளர்களை உருவாக்கியவர் விபுலானந்தர்
பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவராக இருந்ததுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப வேந்தராகவும் அமர்ந்து அவற்றினை நிர்வகித்து அதனூடாகப் பல அறிஞர்களை உருவாக்கியவர் பேராசிரியர் வித்தியானந்தன். இந்த வகையில் இருவரும் ஒப்புநோக்குக்கு உரியவர்கள்
இருவரையுமொப்பிடுகையில் சிற்சில தனித்துவங்களும் வேறுபாடுகளும்கூடக் காண்ப்படுகின்றன அவை காலச் சூழலால் விளைந்த வேறுபாடுகள்
இருவருக்குமிடையே பல வேறுபாடுகளும் உண்டு
முக்கியமான வேறுபாடுகள் இவை
விபுலாந்தர் வாலிப வயதில் துறவறம் மேற்கொண்டவர், ஒருவகையான துற்வற வாழ்வு வாழ்ந்தவர்.குடும்ப ஊறவுகளோ இல் வாழ்வு அனுபவங்களோ அவருக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கவில்லை
வித்தியானந்தரோ இல் வாழ்வு வாழ்ந்தவர் காரியம் யாவினும் கைகொடுக்கும் கமலாதேவியை மணர்ந்தவர் மூன்று ஆண்பிள்ளைகளினதும் இரண்டு பெண் பிள்ளைகளினதும் தந்தைநிறையச் சகோதரங்களுடன் பிறந்தவர் குடும்பப் பொறுப்புகள் பல அவருக்கு இருந்தன, வாழ்வை எல்லோரையும் போல வாழ்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர் அதன் ஏற்ற இறக்கங்களோடு பயணித்தவர்
விபுலானந்தரோ சைவ உணவுக்காரர் வாழ்வைப் புற நிலை நின்று நோக்கியவர் வித்தியானந்தரோ சைவ உணவுக்காரர் அல்ல உணவையும் வாழ்வையும் ருசித்து ரசித்து மகிழ்ந்தவர்.வாழ்வை அகநிலை நின்று பார்த்து அதன் இன்பதுன்பங்களை அனுபவித்தவர்
விபுலானந்தர் எழுத்துகள் தமிழ் நாட்டை மையம் கொள்ள வித்தியானந்தர் எழுத்துகளோ ஈழத்தமிழரையும் அவர்கள் பண்பாட்டையும் மையம் கொண்டிருந்தன
விபுலானந்தர் ஆய்வுகளும் எழுத்துகளும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் சார்ந்ததாக அமைய வித்தியானந்தர் எழுத்துக்களோ செவ்வியல் இலக்கியங்களோடு நாட்டார் இலக்கியங்களையும் பெருமளவு கொண்டனவாக காணப்படுகின்றன வித்தியானதரின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்களும் மன்னார் மட்டக்களப்புக் கூத்து நூல் பதிப்புகளும் இதற்குச் சான்றுகளாகும்
இந்த ஒற்றுமைகளுக்கும் வேற்றுமைகளுக்கும் காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த வாழ்நிலையும் சூழலும் காலமும் ஆகும். இவையே இருவர் எழுத்துக்களிலும் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை மாத்திரமன்றி ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் ஏற்படுத்திய முக்கிய காரணிகள் எனலாம்
இதுவரையும் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு எந்த கட்டுரையும் வந்ததாக என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. இந்தச் சிறிய கட்டுரை இந்த வகையில் சிந்திப்பாருக்கு ஒரு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்
பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இயங்கும் தமிழ் ஆய்வுத் துறைகள் இதனை உயர் படிப்புக்கான ஓர் ஆய்வுத் தலைப்பாக கொடுத்தால் மேலும் பல தகவல்கள் வெளிவரச் சந்தர்ப்பம் உண்டு. அது விரைவில் நடக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்