அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் சந்தித்தனர். இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் என்றும் அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பைடன் உறுதி அளித்தார். அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சுமூகமாக நடக்க வேண்டுமோ, அவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.