பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் நேற்று இரவு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் காயம் ஏற்படவில்லை. ஆனால், தாக்குதல் நடத்திய நபர் உயிரிழந்தார். அந்த நபர் கார் குண்டை வெடிக்கச் செய்தபோது பலியானதாக தெரிகிறது. அவர் மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. காவல்துறை மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, நீதிபதிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடந்த உச்சநீதிமன்றம் அருகே நாடாளுமன்றம், அதிபர் மாளிகை என பல்வேறு முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. எனவே பாதுகாப்பு கருதி அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறை குவிக்கப்பட்டு உள்ளனர். பிரேசிலில் வருகிற 18-ந்தேதி ஜி-20 மாநாடு தொடங்க உள்ளது. அந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.