பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலம் எதுவுமில்லாத சாமானியர்களின் கட்சியான எமக்குத் தென்னிலங்கை அரசியற் சூறாவளி இங்கு ஏற்படுத்தியிருக்கும் அலைகளின் மத்தியிலும் மக்கள் 7,496 வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். இது தமிழ்த்தேசியத்தில் பசுமை அரசியலை வீறுடன் முன்னெடுக்கும் உத்வேகத்தை எமக்கு வழங்கியிருக்கிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், சனநாயகத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சையாகத் தேர்தலை எதிர்கொண்டபோதும், தேர்தல்களின்போது மாத்திரம் தோன்றி மறையும் மழைக் காளான் சுயேச்சைகள் அல்லர் நாம். மாறாக, நாம் இந்த மண்ணில் நிலையாகக் காலூன்றிச் சமூக, அரசியற் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற ஒர் பசுமைக் கட்சி ஆகும். உலக நாடுகளில் சூழல்சார் அரசியல் காத்திரமான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் பசுமைக் கட்சிகள் உருவாகி, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், பேரினவாதம் கோலோச்சும் இலங்கையில் சூழலியல் வாதம் இன்னமும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும் சூழலியத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத கோட்பாடுகளாகக் கருதியே பயணித்து வருகின்றது. தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளில் சில அணிந்திருக்கும் போலித்தேசிய முகமூடிகளும், கட்சிகளின் உள்ளே நிலவும் எதேச்சாதிகாரமும் ஜனநாயக மறுப்பும், அவற்றின் சூழலியம் பற்றிய ஆழமான புரிந்துணர்வின்மையும் எம்மைத் தனிவழி பயணிக்க வைத்திருக்கிறது. எனினும், உண்மையான தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த்தேசியவாதிகள் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தியே வந்துள்ளோம்.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த்தேசியவாதிகளின் ஒற்றுமையை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன. உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் ஒவ்வொருவரும் அடுத்தவரது சுயத்தை அங்கீகரித்தவாறு, ஒருவரில் இன்னொருவர் ஏறிச் சவாரிக்கும் கபட நோக்கு இல்லாது இதய சுத்தியுடன் ஒரு குடையின்கீழ் பயணிப்பதற்கு முன்வரவேண்டும். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கும். பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானவர்களுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, எம்மை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று கடுமையாக உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்தனர்