பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு, பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், காவல்துறை உள்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தின் திரக் மைதான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப்படையினர் 8 பேர், பயங்கரவாதிகள் 9 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
