தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அந்த கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 175 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. முதல் மாநில மாநாடு ஞாபகமாக அங்கு ஏற்றப்பட்ட கட்சி கொடி வைத்துள்ள அந்தப் பகுதி மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான முழு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், இன்று விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்றது. வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இதற்கான பேருந்து ஏற்பாடுகளையும் தவெக கட்சியினர் செய்திருந்தனர். இதனிடையே தவெக தலைவர் விஜய் பனையூருக்கு வர உள்ள நிலையில், இரும்பு தடுப்புகள் கொண்டுவரப்பட்டு, காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலங்கள் வழங்கிய விவசாயிகளிடம் சிறிது நேரம் கலந்துரையாடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிறகு உணவுகள் பரிமாரப்பட்டது.