தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நொவம்பர் மாதத்தில் வடமாகாண மரநடுகை மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி இம்முறையும் நொவம்பர் 22ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதி வரைக்கும் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இக்காலப்பகுதியில் புயலுடன் கூடிய மழை வடபகுதியைத் தாக்கும் என்று வானிலையாளர்கள் கடுமையாக எச்சரித்திருந்ததன் காரணமாக இக்கண்காட்சி திட்டமிட்டவாறு இடம்பெறவில்லை.
எனினும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் ஏற்கனவே மரக்கன்றுகள் பெற்றுக்கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களை நினைவுகூரும் முகமாக மரக்கன்றுகளை நடுகை செய்யும் வழமை தமிழ் மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. இம்மாதம் வீர மறவர்களை நினைவிற்கொள்ளும் மாதம் என்பதால் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் மரக்கன்றுகளைப் பெற்றுச்செல்வதும், மரநடுகையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.