தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 27-11-2024 அன்றைய தினம் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், இதற்காக பிரதேச செயலகத்தில் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் பொறுப்பில் உதவிப் பொருட்கள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழக்கப்படடும் என்பதனை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்திலும் இதற்கான தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களை வழங்கலாம் எனவும் குறிப்பிட்டதுடன், மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளர் பொறுப்பாகவிருந்து வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் உரிய உதவிப் பொருட்கள் பிரதேச செயலகங்களாலும், மாவட்டச் செயலகத்தாலும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை அரசாங்க அதிபர் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.