ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில்,” பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்” எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.