அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன்படி, கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, டிரம்ப் அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான, எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என டிரம்ப் கூறினார்.
இந்த சூழலில், அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்ற நபர்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தபடி உள்ளது. எலைஸ் ஸ்டெபானிக் என்பவரை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என முதன்முதலாக வெளியே கூறினார். இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர், தன்னுடைய கணவர் மற்றும் 3 வயது மகனுடன் வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து நியூயார்க் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த மிரட்டல் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்சேத், அவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தினார். இதுபற்றி டிரம்பின் குழுவில் உள்ள பெண் செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் கூறும்போது, டிரம்ப் நியமித்தவர்களுக்கு எதிராக, அவர்களின் உயிருக்கும், அவர்களுடன் வசிப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உடனடியாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.