மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு 66,575 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார்.
இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் சுமார் 15 நிமிடம் கேட்டறிந்தாக தெரிகிறது. மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு ஆகியோரும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.