ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடியும். இந்த தொழில் நுட்பம் தமிழ் சினிமா துறையில் புதுவகையான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விஜய்யின் தி கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்தை கொண்டு இடம்பெற செய்தனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலில் ஒரு பாடலும் இடம் பெற்றிருந்தது. லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா, ஷாகில் ஆகியோரின் குரலில் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மனசிலாயோ’ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பலரும் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தங்களின் படங்களில் பயன்படுத்தி கொள்ள அனுமதி கேட்டு என்னிடம் வருகிறார்கள். ஆனால் நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டேன். ஏனென்றால் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் குரல் உணர்வுபூர்வமாக இருக்காது. மேலும் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தில் கேட்க நாங்கள் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.
