வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நாட்டைச் சேர்ந்த இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்காளதேசத்தில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், வங்காளதேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்பின் செயல்பாடுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனவும், அங்குள்ள சத்தோகிரம், ராங்பூர் மற்றும் தினஜ்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதே சமயம், வங்காளதேசத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.