வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 6,22,338 வாக்குகள் பெற்ற நிலையில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி 2,11,407 வாக்குகளுடன் 2வது இடமும், பாஜகவின் நவ்யா 1,09,939 வாக்குகள் பெற்று 3வது இடமும் பிடித்தனர். வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி.,யாக பதவியேற்றார். இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திவாறு அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.