ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமரன் படக்குழுவினர் தலைநகர் டில்லி சென்றனர். அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
