சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. விடாமல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. புயல் கரையை கடந்ததை அடுத்து சற்று மழை ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.