சினிமாவை விட்டு விலக போவதை தெரிவிக்கும் வகையில், பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ராந்த் மாஸ்ஸி. கடந்த 2013-ம் ஆண்டு ரன்வீர் சிங், சோனாக்சி சின்ஹா நடிப்பில் வெளியான ‘லூட்டேரா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2017 இல் வெளியான ‘எ டெத் இன் தி கஞ்ச்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், ‘ஜின்னி வெட்ஸ் சன்னி’, ‘ஹசீன் தில்ருபா’, ‘லவ் ஹாஸ்டல்’, 12th பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்து. இந்த நிலையில், விக்ராந்த் மாஸ்ஸி, சினிமாவை விட்டு விலக போவதை தெரிவிக்கும் வகையில், தனது இணையப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி பதிவிட்டுள்ளதாவது, “கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். ஒரு அப்பாவாக, மகனாக மற்றும் ஒரு நடிகனாக வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 2025-ம் ஆண்டு, நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம். மீண்டும் நன்றி” இவ்வாறு விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விக்ராந்த் தற்போது ‘யார் ஜிக்ரி’ மற்றும் ‘ஆன்கோன் கி குஸ்தாகியான்’ ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.