கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 50 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் ஊத்தங்கரை அருகே உள்ள பரசன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரி உடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின. இந்த ஏரியின் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரி, கார்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏரியின் அருகில் உள்ள அண்ணாநகர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இந்த வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஊத்தங்கரை பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் முகாமில் தங்க வைத்து இருந்தவர்களை ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். அப்போது அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.