அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது.
ந.லோகதயாளன்.
பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன் சட்ட விரோதமாக பூட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை ப.நோ.கூ. சங்கத்தின் அறையில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான வலைகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு கடந்த சனிக்கிழமை30ம் திகதி சென்ற பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான சகாதேவன் தான் கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் எனவும் களஞ்சிய அறையை திறக்குமாறும் அங்கிருந்த ப.நோ.கூ.சங்க ஊழியர்களிடம் கோரியுள்ளார். அலுவலகத்தின் திறப்பு நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடமே உள்ளதாக ப.நோ.கூ.சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திணைக்கள அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட சகாதேவன் தான் உடன் களஞ்சியத்தை பார்வையிட வேண்டும் களஞ்சியத்தை திறக்குமாறு கோரியுள்ளார். இதற்கு திணைக்கள அதிகாரிகள் சனிக் கிழமை விடுமுறை என்பதனால் வீடுகளில் உள்ளோம் வேண்டுமானால் ஒரு மணி நேரம் தாமதித்தால் வர முடியும் எனப் பதிலளித்துள்ளனர்.
ஒரு மணி நேரம் எல்லாம் காத்திருக்க முடியாது நான் வரும்போது திறக்க முடியாத களஞ்சியம் நீங்கள் நினைத்தபோதும் திறக்க முடியாது எனத் தெரிவித்து மேலதிகமாக ஒரு பூட்டைப் போட்டு பூட்டியதோடு அதற்கான திறப்பையும் எடுத்துச் சென்றுள்ளார்.
குறித்த அடாவடி தொடர்பில் நேற்றைய தினம் காலையில் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தை மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதனால் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் செயலாளரிடம் இது தொடர்பில் முறையிட்டபோது உடனடியாக ஒரு மணி நேரத்தில் களஞ்சியம் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்தமையால் களஞ்சியத்திற்கு போடப்பட்ட பூட்டு அகற்றப்பட்டுள்ளது.