புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக 56 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.